Saturday, August 25, 2012

#மாற்றங்கள் #




கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது
கொஞ்சல்ஸ் 

6 வாரத்தில : ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில : எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில : லவ்வா அப்பிடின்னா?
ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா
 
6 வாரத்தில : அன்பே நான் வந்துட்டேன் – சாயந்தரம் 6 மணிக்கே
6 மாசத்தில : வந்துக்கிட்டே இருக்கேன் – சாயந்தரம் 8 மணிக்கு
6 வருசத்தில : (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது – மணி நைட் 11 மணி


பரிசு 

6 வாரத்தில : செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில : பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில : இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ
ஃபோன் அடிச்சா 

6 வாரத்தில : கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில : ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில : எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்

சமையல் 

6 வாரத்தில : இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில : இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில : இன்னைக்கும் அதே தானா


டிரஸ் 

6 வாரத்தில : இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில : திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில : இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

{உண்மையான்னு கேட்டு  விட்டுல அடிவாங்கதிங்க )

என் உறவுகளுக்கு ,



புன்னகை மறைத்த கண்ணீர்..
எனது எதிரிகளும் துரோகிகளும் இருப்பதனால்தான் !

என்னால் விரைவாக பயணிக்க முடிகிறது..
எனினும் நண்பர்களின் பாராட்டால் மகிழ்ந்து..
என் தாய்மார்களால் அரவணைக்கப்படுகின்றமையால் தான் -
என்னை நான் தோற்றதாய் நினைப்பதில்லை.
காலம் கையில் இல்லை என்பதிற்காய்
காலம் முடிந்ததில்லை
தெடருகிறது என்பது தான்......
நாம் நட்பாய் இருந்தால்
மகிழ்ச்சியாகலாம்
சந்திக்கின்றேன் நான் தெருவில்
தொலையாத கிழிசல் மானிடனாய்
உங்கள் நிழல் படிந்த நேசங்களை
நேசித்தாவது..
என்றும்..
என் புன்னகையும் மகிழ்ச்சியும் சமர்ப்பணம்!
என் நட்புகளுக்கு ...................

நான் வேண்டும் வரங்கள் !




தினம் தினம் பௌர்ணமி
நினைத்த உடன் மழை
சாலையோர பூக்கள்...... 
அதிகாலை பனித்துளி....... 
இரவு நேர மெல்லிசை....... 
கள்ளமில்லா சிரிப்பு........ 
பொய்யில்லா நட்பு...... 
தினம் நூறு கவிதைகள்......கவலையற்ற மீதமுள்ள வாழ்நாள் .....
தோள் சாய உண்மையான தோழன்..... 
பாசம் உள்ள சகோதரன்....... 
தாய் மடி தூக்கம்...... 
தூக்கத்தில் மரணம்.........

திருட்டு ஆண்மை !




பெண்ணே கவனமாக தேடு 
பெண்ணே கவனமாக தேடு 
நண்பனை, தோழனை....
சக மனுசிதானே என்று - உன் முகத்தை 
பார்த்து பேசும் நேரத்தை விட.....
முகத்துக்கு கீழே முந்தானை 
காற்றில் கலையுமா என்று காத்திருக்கும் 
ஆண்களே அதிகம் பெண்ணே... 
பெண்ணே கவனமாக தேடு 
நண்பனை, தோழனை...
இன்டர்நெட்டில் சந்தித்தேன்... 
facebook இல் பேசினேன்.... 
வெளிநாடுகளில்  இருக்கிறான் என்று 
கனவில் மிதக்காதே... 
களவாடபடுவது உன் கற்பு மட்டும் அல்ல 
உன் தாய் தந்தையரின் நம்பிக்கையும் ,
நம் கலாச்சாரமும்தான்....

" தாய் "



மழையில் நனைந்துகொண்டே

வீட்டுக்கு வந்தேன்
' குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே '
என்றார் அண்ணன்
' எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ,
மழையை  !!!

கடலைகளில் பல வகைகள் உண்டு....



சற்று விபரமாக பார்போமா வாருங்கள் ...

1.எஸ்எம்எஸ் கடலை

2.மின்னஞ்சல் கடலை

3.சாட்டிங் கடலை

4.தொலைப்பேசிக்கடலை

5.மொபைல்க் கடலை

6.நேரில் கடலை

சிறப்பாக கடலை போட சில வழிகள் :

1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .

2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.

3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .

4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )

5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )

6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )

7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது .

8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .

இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .

Saturday, August 11, 2012

செட்டிநாடு மட்டன் குழம்பு....



தேவையான பொருட்கள்

மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, கிராம்பு கருவேப்பில்லை
தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு 

அரைக்க தேவையானவை :

மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.

ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம். சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு தயார்.

பட்டர் சிக்கன் மசாலா...



தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 4
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் – 200 மிலி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம்
முந்திரி விழுது - 2 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன் ( காய்ந்த வெந்தைய இலை)
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு கலர் - 1/2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தாளிக்க

பட்டர் சிக்கன் செய்முறை

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தயிர், கறிமசாலா, உப்பு, கசூரி மேத்தி, சிவப்பு கலர் இவற்றை நன்கு கலந்து சிக்கனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை நன்றாக வேக வைக்கவும். மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி இவை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சிக்கன் ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.

தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து கிளறவும். பின்னர் மிதமான தீயில் வேக விடவும். பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கு முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையான பட்டர் சிக்கன் மசாலா ரெடி. இது புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

கடாய் சிக்கன்...



தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 3

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

மல்லிதூள் – 2 டீ ஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்

பட்டை, கிராம்பு, அன்னாசி பூ தாளிக்க

நெய் – 2 டீ ஸ்பூன்

எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மல்லித்தழை – சிறிதளவு

கடாய் சிக்கன் செய்முறை

எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி உப்பு போட்டு ஊறவைக்கவும்.

கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். அதில் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.இதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பாதிஅளவு மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கிக் கொள்ளவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன், சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மீதமுள்ள பொடி வகைகளை சேர்த்து , அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைக்கவும்.சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மல்லித்தழை தூவவும். கடாய் சிக்கன் ரெடி.

குக்கரில் செய்வதை விட எலும்பில்லாத சிக்கனை கடாயில் சமைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். முழு சத்துக்களும் அப்படியே கிடைக்கும்.

நாட்டு கோழி குழம்பு!



தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
சோம்பு - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா செய்முறை

சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

குழம்பு செய்முறை

நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும். இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும். விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்

செட்டிநாடு எலும்பு குழம்பு




தேவையான பொருட்கள்

எலும்பு கறி - அரைக்கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 2

மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் 

மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன்

தேங்காய் பால் — 1 கப்

எண்ணைய் — 1 1/2 ஸ்பூன்

பட்டை — 1 அங்குலம் அளவு

கிராம்பு — 4

கறிவேப்பிலை ஒரு கொத்து

எலும்பு குழம்பு செய்முறை

குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும். அப்பொழுதுதான் கறியில் உப்பு பிடிக்கும். பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும்.

5 விசில் வரை விடவும் அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும். விசில் இறங்கிய உடன் சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

ஆட்டு ரத்த பொரியல்...



தேவையான பொருட்கள்

ஆட்டு ரத்தம் – 1 கப்

சின்ன வெங்காயம் -150 கிராம்

வர மிளகாய் – 3

சீரகம் – 2 டீ ஸ்பூன்

கடுகு – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைகரண்டி

பொரியல் செய்முறை

ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் வரமிளகாயை கிள்ளி போடவும்.

நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். ரத்தம் தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக தேங்காய் துறுவல் போட்டு கிளறி இறக்கவும். அசத்தலான ஆட்டு ரத்தப் பொரியல் தயார். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

கத்திரிக்காய் மிளகு வறுவல்...




தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு கத்தரிக்காயை நீளமாக சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கத்தரிக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் வெங்காயம் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின் வடிகட்டி வைத்த கத்தரிக்காய் சேர்த்து கிளறி, மிளகுத்தூளை அதோடு சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்க வேண்டும்.
இப்போது நன்கு காரசாரமான கத்தரிக்காய் மிளகு வறுவல் ரெடி!!!

கொண்டைக்கடலை குழம்பு...





தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை - 150 கிராம்
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 3
முந்திரி பருப்பு - 2
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
புளி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவிலேயே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு பாத்திரத்தில் கடலையை கழுவி, தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளியை நன்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு அதில் கத்தரிக்காயை போட்டு நன்கு வேகவிட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் விட்டு, உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து, வேண்டுமென்றால் உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் பச்சை வாசனை போனதும், புளியை நன்கு கரைத்து, அந்த நீரை குழம்பில் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி விடவும்.
இப்போது சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி!!!

மீல் மேக்கர் கோப்தா...




தேவையான பொருட்கள்:
கோப்தாவிற்கு:
மீல் மேக்கர் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து பிசைந்தது)
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கிரேவிக்கு:
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி - 1/2 கப் (அரைத்தது)
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
புதினா - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு, 8-10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்து பிசைந்துள்ள உருளைக்கிழங்கு, இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் மீல் மேக்கரை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அந்த கலவையை சிறு உருண்டைகளாக செய்து, பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, சீரகம் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
நன்கு கிளறியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் தீயை குறைவில் வைத்து, அதில் மீல் மேக்கரை போட்டு, ஒரு முறை கிளறி, அந்த மீல் மேக்கரில் மசாலா சேரும் படியும், எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரையும் நன்கு கிளறவும்.
பின்னர் அதில் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின் அந்த மசாலா சற்று கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி அதில் புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம்.
இப்போது சுவையான மீல் மேக்கர் கோப்தா ரெடி!!!

சிக்கன் பக்கோடா


தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்

சாட் மசாலா - 1/4 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
கடலை மாவு - 5 ஸ்பூன்
கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு
ஓமம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். பின் சிக்கனை மிக்ஸி அல்லது ஷாப்பரில் போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்து கொள்ளவும் (நைசாக அரைக்க வேண்டாம்). வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு அந்த சிக்கனுடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், கரம்மசாலா தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், ஓமம், சோடா உப்பு, உப்பு, கேசரி பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

தனியாக பிசைந்து ஊற வைத்துள்ள சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் சிக்கன் உருண்டையை மாவிற்குள் போட்டு முக்கி எடுக்காமல், கையை மாவில் நனைத்து, அந்த மாவை சிக்கன் உருண்டை மேல் தடவ வேண்டும். (சிக்கனை மாவிற்குள் போட்டு முக்கி எடுத்தால் சிக்கனை விட மாவு நிறைய இருப்பது போல் காணப்படும்.)

பிறகு அந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான சிக்கன் பக்கோடா ரெடி!!!

இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

கடாய் மஸ்ரூம் மசாலா



தேவையான பொருட்கள் :
மஸ்ரூம் - 250 கிராம்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மஸ்ரூமை நன்கு கழுவி வெட்டிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு, சிறிது உப்பை தூவி, 2 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் அதில் தண்ணீரை ஊற்றி, நறுக்கிய மஸ்ரூமை போட்டு, கிளறி, தீயை குறைவில் வைத்து, மஸ்ரூம் வெந்து, மசாலா சற்று கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
இப்போது சுவையான கடாய் மஸ்ரூம் மசாலா ரெடி!!! இந்த மசாலாவை சப்பாத்தி, சாதம், நூடூல்ஸ் போன்றவற்றோடு சாப்பிடலாம்....